Tuesday, January 26, 2016

இணை கற்பித்தல்
அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லைஎன்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும், ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள் ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்தவொன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் என்று இஸ்லாம் கூறுகிறது.இவ்வாறு இறைவனுக்கு இணை கற்பித்தல், மனிதர்கள் செய்கின்ற குற்றங்களிலேயே மிகவும் பெரிய குற்றம் எனவும், இக்கொள்கையிலிருந்து திருந்திக் கொள்ளாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை; என்றென்றும் நரகத்தில் கிடப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.
சொர்க்கம், சொர்க்கச் சோலைகள்
இவ்வுலகம் முழுமையாக அழிக்கப்பட்ட பின் அனைவரும் இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். இவ்வுலகில் இறைவனையும், இறைத்தூதர்களையும் ஏற்று அவர்கள் காட்டிய வழியில் நடந்த நல்லோர்க்கு இறைவன் அளிக்கும் பரிசே சொர்க்கமாகும்.சொர்க்கத்தில் நுழையும் ஒருவர் அதில் நிரந்தரமாக இருப்பார். விரும்பிய அனைத்தும் அவருக்கு அங்கே கிடைக்கும். கவலையோ, சோர்வோ, சங்கடமோ, மன உளைச்சலோ இல்லாமல் சொர்க்கத்தில் நுழைந்தவர்கள் இன்பத்தை அனுபவிப்பார்கள்.
தூதர்கள்
மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களிலிருந்தே தகுதியானவர்களை இறைவன் தேர்வு செய்து வாழ்க்கை நெறியைக் கொடுத்து அனுப்புவான். இவ்வாறு அனுப்பப்படுவோரை இறைத் தூதர்கள் என இஸ்லாம் குறிப்பிடுகிறது.முதல் மனிதரிலிருந்து இறுதித் தூதராகிய நபிகள் நாயகம் வரை ஏராளமான தூதர்கள் உலகின் பல பாகங்களுக்கும், பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கும் நல்வழி காட்ட அனுப்பப்பட்டனர்.இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களின் எண்ணிக்கை குறித்து திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகத்தின் ஆதாரப்பூர்வமான பொன்மொழிகளிலோ குறிப்பிடப்படவில்லை.தூதர்களாக அனுப்பப்படுவோர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே வாழ்ந்தனர். தூதர்களாக நியமிக்கப்பட்டதால் அவர்களுக்கு இறைத்தன்மை வழங்கப்படாது. இறைவனிடமிருந்து செய்தி அவர்களுக்குக் கிடைக்கும் என்பதே அவர்களுக்குரிய முக்கிய சிறப்பாகும்.
தொழுகை
முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமைகளில் முக்கியமான கடமை தொழுகையாகும்.தொழுகை என்பது சிறிது நேரம் நின்றும், சிறிது நேரம் குனிந்தும், சிறிது நேரம் நெற்றியை நிலத்தில் வைத்தும், சிறிது நேரம் அமர்ந்தும் ஒவ்வொரு நிலையிலும் ஓத வேண்டியவைகளை ஓதியும் நிறைவேற்றப்படும் வணக்கமாகும்.ஒவ்வொரு நாளும் ஐந்து முறை ஐந்து நேரங்களில் தொழுகையை நிறைவேற்றி ஆக வேண்டும். இது தவிர அவரவர் விருப்பப்பட்டு தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொழுது இறைவனின் அன்பை பெறலாம்.
நயவஞ்சகர்கள்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொந்த ஊரான மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா எனும் நகரில் தஞ்சமடைந்தார்கள். அங்கே அவர்களின் பிரச்சாரத்திற்கு நல்ல பலன் கிடைத்ததால் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இதனால் அதிகாரமும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு வந்து சேர்ந்தது.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனா வருவதற்கு முன் ஆட்சியையும், அதிகாரத்தையும் அனுபவித்து வந்த சிலர், உளப் பூர்வமாக இஸ்லாத்தை ஏற்காமல் சுய நலனுக்காகவும், முஸ்லிம்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போல் நடித்து வந்தனர்.இவர்கள் முஸ்லிம்களைப் போலவே பள்ளிவாசலில் வந்து தொழுகையிலும் பங்கெடுப்பார்கள். போருக்கும் புறப்படுவார்கள். ஆயினும் முஸ்லிம்கள் குறித்த செய்திகளை மக்காவில் உள்ள முஸ்லிம்களின் எதிரிகளுக்கு வழங்குவதற்காகவே இவ்வாறு முஸ்லிம்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முஸ்லிம்களைப் போலவே கலந்து கொள்வார்கள்.இவர்களைத் தான் குர்ஆன் நயவஞ்சகர்கள் எனக் குறிப்பிடுகிறது.
நம்பிக்கை கொள்வது
திருக்குர்ஆன் அதிகமான இடங்களில் நம்பிக்கை கொள்வது’ ‘நம்பிக்கை கொண்டோர்என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது.பொதுவாக நம்பிக்கை கொள்வது என்பதை வகாபிகள் என்ன பொருளில் புரிந்து கொள்வோமோ அந்தப் பொருளில் இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.மாறாக குறிப்பிட்ட சில விசயங்களை உளமாற ஏற்று நம்பிக்கை கொள்வதையே குர்ஆன் குறிப்பிடுகிறது. அல்லாஹ், வானவர்கள், இறைத்தூதர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்கள், மறுமை நாள், அங்கு நடக்கும் விசாரணை, மறுமை நாளுக்கு முன் நடக்கும் அமளிகள், நல்லோர்க்குக் கிடைக்கும் சொர்க்கம் எனும் பரிசு, தீயோர்க்குக் கிடைக்கும் நரகம் எனும் தண்டனை, மண்ணறை வேதனை, எல்லாமே இறைவனின் நாட்டப்படியே நடக்கிறது எனும் விதி போன்றவற்றை நம்புவதையே நம்பிக்கை கொள்வதுஎன குர்ஆன் குறிப்பிடுகிறது.
நரகம்
அல்லாஹ்வுடைய மற்றும் அவனுடைய தூதர்களின் வழியைப் பின்பற்றாத மக்களுக்கு மறுமையில் விசாரணைக்குப் பிறகு வழங்கப்படும் தண்டனையே நரகம் எனப்படும்.சில குற்றங்கள் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.இக்குற்றங்களைத் தவிர ஏனைய குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் இறைவனின் கருணையால் மன்னிக்கப்பட்டால் சொர்க்கம் செல்வார்கள். மன்னிக்கப்படாவிட்டால் தங்களது தவறுகளுக்கேற்ப தண்டனைகளை அனுபவித்து விட்டுப் பிறகு சொர்க்கம் செல்வார்கள்.
நோன்பு
வைகறையிலிருந்து சூரியன் மறையும் வரை இறைவனுக்காக உண்ணாமலும், பருகாமலும் குடும்ப வாழ்வில் ஈடுபடாமலும் இருக்கும் கட்டுப்பாடே நோன்பு எனப்படும்.ஆண்டுதோறும் ரமலான் எனும் மாதம் முழுவதும் அவ்வாறு நோன்பு நோற்பது கட்டாயமாகும். இது தவிர சில குற்றங்களுக்கான பரிகாரமாகவும் நோன்பு கூறப்பட்டுள்ளது.
வானவர்கள்
இறைவனது படைப்புகளில் வானவர்கள் என்றொரு இனம் இருப்பதாக திருக்குர்ஆன் கூறுகிறது. இவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். இவர்களில் ஆண் பெண் என்ற பால் வேற்றுமை இல்லை. எனவே இனப் பெருக்கம் செய்ய மாட்டார்கள். இவர்களை இறைத்தூதர்கள் தவிர மற்ற மனிதர்கள் காண இயலாது. ஏக இறைவன் தனித்தே தனது காரியங்களை ஆற்றவல்லவன் என்றாலும் வானவர்கள் என்ற இனத்தைப் படைத்து அவர்கள் மூலம் பல்வேறு வேலைகளை வாங்குகிறான்.
அல்லாஹ்
அல்லாஹ் என்பது அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் சர்வ அதிகாரமும், வல்லமையும் படைத்த ஏக இறைவனை மட்டுமே குறிக்கும் அரபு மொழிச் சொல்லாகும்.நபிகள் நாயகத்துக்கு முன்பே இச்சொல்லை அரபுகள் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் வணங்கி வந்த சிலைகளை வேறு வார்த்தைகளில் தான் குறிப்பிட்டார்களே தவிர அல்லாஹ் எனக் கூறியதில்லை.அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் ஒரே கடவுள் இருக்கிறான்; அவன்தான் அல்லாஹ். மற்ற தெய்வங்கள்யாவும் அல்லாஹ்விடம் பெற்றுத் தரும் குட்டி தெய்வங்கள் என்பதே அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.அல்லாஹ்வுக்கு மனைவியும், மக்களும் இல்லை. அல்லாஹ்வுக்கு பெற்றோர் இல்லை. அதனால் உடன் பிறப்புகளும் இல்லை. அல்லாஹ்வுக்கு இயலாதது எதுவும் இல்லை. அல்லாஹ்வுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை. தூக்கம், மறதி, அசதி, களைப்பு, பசி, தாகம், இயற்கை உபாதை, முதுமை, நோய் என எந்த விதமான பலவீனமும் அல்லாஹ்வுக்கு இல்லை. எந்த விதமான தேவையும் அவனுக்கு அறவே இல்லை. இத்தகைய இலக்கணங்கள் யாவும் ஒருங்கே கொண்டிருப்பவன்தான் அல்லாஹ்.
அய்யூப்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். யூத கிருஸ்த்தவர்கள் இவரை யோபு என்பர். இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர்.
அரஃபாத்
மக்காவிற்கு வெளியே அமைந்துள்ள மாபெரும் மைதானத்தின் பெயரே அரஃபா அல்லது அரஃபாத் ஆகும். ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர்கள் ஹஜ் மாதம் பிறை ஒன்பதில் இம்மைதானத்தில் குழுமுவது கட்டாயக் கடமையாகும். இம்மைதானத்தில் சிறிது நேரமாவது தங்காவிட்டால் ஹஜ் நிறைவேறாது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடாரமடித்து இங்கே தங்குவார்கள். இந்த நாளில் சிறப்பான ஒரு சொற்பொழிவும் நிகழ்த்தப்படும்.
அர்ஷ்
எல்லாம் வல்ல ஏக இறைவன் வீற்றிருந்து ஆட்சி செய்யும் ஆசனமே அர்ஷ் எனப்படும். இது வானங்களையும் பூமியையும் விட மிகவும் பிரம்மாண்டமானது. இறைவன் அர்ஷின் மீது வீற்றிருக்கிறான் என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.
அல்யஸஉ
அல்யஸஉ என்பார் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி திருக்குர்ஆனில் 6:86, 38:48, ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. அதிகமான விபரங்கள் எதுவும் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை.
அன்ஸார்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களை ஏற்றுக் கொண்ட தோழர்களும் மக்காவில் இருந்து விரட்டப்பட்டு மதீனாவில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு தஞ்சம் புகுந்தவர்களை அரவணைத்து ஆதரவளித்து பேருதவி செய்தவர்களே அன்ஸார்கள் எனப்படுவர். இவர்களில் ஒவ்வொருவரும் அகதிகளாக வந்த மக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டு அவருக்கு தங்களின் வீடு, சொத்து, வியாபாரம், ஆடைகள் அனைத்திலும் சரிபாதியாக பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
ஆதம்
இஸ்லாமிய நம்பிக்கைப் படி அல்லாஹ் முதல் மனிதரைக் களி மண்ணால் படைத்தான். அவ்வாறு படைக்கப்பட்டவரின் பெயர்தான் ஆதம். இவர்தான் முழு உலகில் வாழும் அனைத்து மக்களின் தந்தையாவார். அவரிலிருந்து அவரது பெண் துணையை இறைவன் படைத்தான். கிருத்தவர்கள் இவரை ஆதாம் என்பர்.
ஆது
ஹுத்எனும் இறைத்தூதர் அனுப்பப்பட்ட சமுதாயமே ஆதுசமுதாயம் எனப்படும். இவர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தனர். ஹுத் நபியை ஏற்க மறுத்து அக்கிரமம் புரிந்ததால் வறண்ட காற்றை அனுப்பி இறைவன் அவர்களை அழித்தான்.
இஞ்சீல்
இவ்வேதம் ஈஸா நபிக்கு அருளப்பட்ட வேதம் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.
இஃதிகாஃப்
இச்சொல்லுக்குத் தங்குதல் என்று பொருள். இஸ்லாமிய நம்பிக்கைப்படி சிறிது நேரம் அல்லது சில நாட்கள் பள்ளிவாசலில் தங்கி இறை நினைவிலும், வழிபாட்டிலும் இருப்பது தான் இஃதிகாஃப் எனப்படும். ஒருநாள் இஃதிகாஃப் இருப்பதாக ஒருவர் முடிவு செய்தால், அந்த நாள் முழுவதும் குடும்ப வாழ்க்கை, கொடுக்கல் வாங்கல் போன்ற எந்த அலுவலிலும் ஈடுபடக் கூடாது.ஒரேயடியாக உலகைத் துறப்பதைத் தடை செய்த இஸ்லாம் குடும்பத்துக்கோ, உலகத்துக்கோ பாதிப்பு ஏற்படாத இந்த சிறிய அளவிலான தவத்தை மட்டும் அனுமதிக்கிறது. ஒரிரு நாட்கள் இவ்வாறு பள்ளிவாசலில் தங்கி உலகத் தொடர்பைத் தற்காலிகமாக அறுத்துக் கொண்டவர் வெளியே வந்ததும் பக்குவம் பெற்றவராக நடப்பார். அவருக்கும், உலகுக்கும் இதனால் பயன் கிடைக்கும்.
இத்தா
கணவனை இழந்த பெண்களும், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். இந்த கால கட்டமே இத்தா எனப்படும். கணவனை இழந்த பெண் நான்கு மாதம் பத்து நாட்களும் கழிப்பதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் காலம் முழுமை அடைவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது.
இத்ரீஸ்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 19:56, 21:85 ஆகிய இரு வசனங்களில் மட்டுமே குறிப்பிடுகிறது. அதிகமான விபரம் எதுவும் இவரைப் பற்றி குர்ஆனில் கூறப்படவில்லை.
இப்ராஹீம்
இறைத்தூதர்களிலேயே அதிகமான அருள் பெற்றவர் இப்ராஹீம் தான். மற்றவர்களுக்கு வழங்கிய அளவுக்கு அற்புதங்கள் வழங்கப்படாவிட்டாலும் இவரது தகுதியைப் பெரிதும் அல்லாஹ் உயர்த்தியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) மட்டுமின்றி இஸ்ஹாக், யஃகூப், தாவூத், ஸுலைமான், அய்யூப், யூசுப், மூஸா, ஹாரூன் அனைவரும் இவரது வழித்தோன்றல்களே. யூதர்களும், கிருத்தவர்களும், முஸ்லிம்களும் பெரிதும் மதிக்கக்கூடிய மகானாகவும் இவர்கள் திகழ்கிறார்கள். இவரை ஆப்ரஹாம்என்று யூத கிருத்தவர்கள் கூறுவார்கள்.
இப்லீஸ்
முதல் மனிதர் ஆதம் படைக்கப்படுவதற்கு முன் நல்லோரில் ஒருவனாக இருந்தவன் இப்லீஸ். இவன் நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன். முதல் மனிதரைப் படைத்தவுடன் அவருக்கு மரியாதை செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். வானவர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினார்கள். அவர்களுடன் இருந்த இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். மரியாதை செய்ய மறுத்தான். மனிதர்களை வழி கெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டிணான். என்னையே முழுமையாக நம்பும் நல்லோரை உன்னால் கெடுக்க முடியாது. தனது மனோ இச்சைகளுக்கு அடிமைப் பட்டவர்களையே உன்னால் வழி கெடுக்க முடியும்என்று கூறி இறைவன் வாய்ப்பளித்தான். இவனது சந்ததிகள் தாம் ஷைத்தான்கள் எனப்படுவோர்.
இம்ரான்
இவர் ஈஸா நபியின் தாயாரான மரியம் அவர்களுக்குத் தந்தையாவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 3:33, 3:35, 66:12 ஆகிய மூன்று இடங்களில் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றி வேறு விபரங்கள் எதுவும் குர்ஆனில் கூறப்படவில்லை.
இல்யாஸ்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் தமது சமுதாயத்தின் பல கடவுள் நம்பிக்கையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த விவரம் தவிர அதிகமான விவரம் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை. (திருக்குர்ஆன் 37:123, 6:85)
இஸ்தப்ரக்
இஸ்தப்ரக் என்பது ஒருவகைப் பட்டாடையின் பெயராகும். இது பட்டாடைகளில் அதிக அடர்த்தி உடையதாகும்.
இஸ்ராயீல்
இப்ராஹீம் நபியின் மகன் இஸ்ஹாக். இஸ்ஹாக்குடைய மகன் யஃகூப்.
யஃகூப்பின் மற்றொரு பெயர் இஸ்ராயீல். இஸ்ரவேலர்கள் எனப்படுவோர் யஃகூப் நபியின் வழித்தோன்றல்களாக இருப்பதால் அவர்கள் இஸ்ராயீலின் மக்கள் என்று கூறப்படுகின்றனர். கிறித்தவர்கள் இவரை இஸ்ரவேல், யாகோப், ஜேக்கப் என்பர்.
இஸ்மாயீல்
இப்ராஹீம் நபியின் மகன் இஸ்மாயீல். இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இஸ்மாயீலின் வழியில் தான் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தார்கள். யூத, கிருத்தவர்கள் இவரை இஸ்மவேல’; என்பர்.
இஸ்ஹாக்
இப்ராஹீம் நபியின் இன்னொரு புதல்வர் இஸ்ஹாக். இவரும் இறைத்தூதர்களில் ஒருவர் என்பதைத் தவிர இவரைப் பற்றி அதிகமான விபரங்கள் ஏதும் குர்ஆனில் கூறப்படவில்லை. பல நபிமார்களுடன் இணைத்து இவரும் நல்லவராக இருந்தார் என்று குர்ஆன் கூறுகிறது. இவரது பிரச்சாரம் அதில் சந்தித்த பிரச்சினைகள் பற்றி ஏதும் கூறப்படவில்லை.
இஹ்ராம்
ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்றத் துவங்கும் போது எடுக்கும் உறுதிமொழியே இஹ்ராம் எனப்படும். இவ்வாறு உறுதி மொழி எடுக்கும்போது தைக்கப்படாத ஆடையை அணிய வேண்டும்.
ஈஸா
கிறித்தவர்கள் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடும் இயேசுவை திருக்குர்ஆன் ஈஸா எனக் கூறுகிறது. ஈஸா நபியவர்கள் சில அற்புதங்கள் நிகழ்த்தியதையும், தந்தையின்றிப் பிறந்ததையும் இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவரும் மற்ற இறைத்தூதர்களைப் போல் ஒரு தூதராவார். இறைவனுக்கு மகன் இருக்க முடியாது என்பதால் இவர் இறை மகன் அல்லர் என்று குர்ஆன் கூறுகிறது.
உம்ரா
மக்கா சென்று கஅபாவைச் சுற்றுதல், கஅபா வளாகத்தில் தொழுதல், ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே ஓடுதல் உம்ரா எனப்படும். உம்ரா என்பது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கென தைக்கப்படாத ஆடையை அணிய வேண்டும். இந்த கால கட்டத்தில் இல்லறம் நடத்துதல், வேட்டையாடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
உஸ்ஸா
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையுடையோர் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயரே உஸ்ஸா எனப்படும்.
ஃபிர்அவ்ன்
யூத, கிருத்தவர்களால் பாரோன்எனக் குறிப்பிடப்படும் ஃபிர்அவ்ன் வலிமைமிக்க மன்னனாகத்; திகழ்ந்தவன். தன்னையே கடவுள் என வாதிட்டவன். தனது நாட்டில் சிறுபான்மையினராக இருந்த இஸ்ரவேலர்களைக் கொடுமைப்படுத்தினான். அவர்களில் ஆண்களை மட்டும் கொன்று குவித்தான். இவனுக்கு ஓரிறைக் கொள்கையை உணர்த்தவும், அவனது கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும் மூஸா(மோசே) ஹாரூன் (ஆரோன்) ஆகிய இருவரையும் தூதர்களாக இறைவன் அனுப்பினான்.ஆயினும் அவன் திருந்தவில்லை. அவனும், அவனது படையினரும் கடலில் முழ்கடிக்கப்பட்டனர்.
கஅபா
முதல் மனிதர் படைக்கப்பட்டவுடன் அவர் இறைவனை வணங்குவதற்காக எழுப்பிய ஆலயம் தான் கஅபா - 3:96. இதிலிருந்து ஆதம் (அலை) இங்கு தான் வசித்தார்கள் என்பதை அறியலாம்.செவ்வகமான அக்கட்டடம் ஆதமும், அவரது பிள்ளைகளும் உள்ளே சென்று தொழப் போதுமானதாகும். ஆனால் இன்று அனைவரும் உள்ளே தொழ முடியாது என்பதால் அதைச் சுற்றி அதற்கு வெளியே தொழுகிறார்கள். அதைச் சுற்றியுள்ள வளாகமும், கட்டமும் தான் மஸ்ஜிதுல் ஹராம் - புனிதப் பள்ளி எனப்படுகிறது. அவருக்கு பின் கஅபா சிதிலமடைந்து பின்னர் இப்ராஹீம் நபியவர்கள் இறைக் கட்டளைப்படி அந்த பாலைவனத்தைக் கண்டுபிடித்து தமது மனைவியையும், மகன் இஸ்மாயீலையும் குடியமர்த்தினார்கள்.இறைவனின் அற்புதமான வற்றாத ஸம்ஸம் கிணறு ஏற்படுத்தப்பட்ட பின் கால் கோடி மக்களுக்கு அது தினமும் பயன்படுகிறது. அந்தத் தண்ணீர் காரணமாக அந்த பாலைவனம் ஊராக ஆனது. எனவே அங்கே முதல் ஆலயத்தை தந்தையும் மகனுமாக மறுபடியும் கட்டினார்கள்.
கிப்லா
கிப்லா என்றால் முன்னோக்குதல், முன்னோக்கும் இலக்கு என்பது பொருள். இஸ்லாமிய வழக்கில் அல்லாஹ்வைத் தொழும் போது நோக்கும் இலக்கு கிப்லா எனப்படுகிறது. முஸ்லிம்கள் மக்காவில் அமைந்துள்ள உலகின் முதல் ஆலயமான கஅபா ஆலயத்தை நோக்கியே தொழ வேண்டும.; கஅபா ஆலயத்தையே தொழுவதாக எண்ணக் கூடாது. அது ஒரு கட்டடமே. அதற்கு இறைத்தன்மை ஏதும் கிடையாது. கஅபாவிடம் எந்தக் கோரிக்கையும் வைக்க கூடாது. எதையும் நோக்காமல் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. அவ்வாறு நோக்குவது உலகில் ஏக இறைவனை வணங்குவதற்காக முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாக இருக்கட்டும் என்பதுதான் இதற்குக் காரணம்.பலரும் சேர்ந்து தொழும் இடங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் நோக்கினால் ஒழுங்கு கெடும். இதற்காகத்தான் அனைவரும் ஒன்றையே நோக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மேற்குத் திசையை வணங்குவதாக இந்தியாவில் சிலர் நினைக்கின்றனர். இந்தியாவுக்கு மேற்கே கஅபா ஆலயம் அமைந்திருப்பதே இதற்கு காரணம். மற்ற நாடுகளில் வடக்கு, தெற்கு, கிழக்கு என்று பல திசைகளிலும் முஸ்லிம்கள் தொழுவார்கள்.மக்காவுக்குச் சென்று கஅபாவை நேரில் கண்டால் அதைச் சுற்றி அனைத்துத் திசைகளிலும் முஸ்லிம்கள் தொழுவார்கள். எனவே திசையை முஸ்லிம்கள் வணங்குவதாகக் கருதுவது தவறாகும்.
குர்பானி

முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் இரண்டாவது பெருநாளாகக் கருதப்படும் ஹஜ் பெருநாளில் இறைவனுக்காக ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அறுத்துப் பலியிடுதல் குர்பானி எனப்படும். இவ்வாறு பலியிடுவது இறைவனைச் சென்றடையும் என்று கருதக் கூடாது. ஏனெனில் அவற்றின் இரத்தங்களோ, இறைச்சிகளோ அல்லாஹ்வை அடையாது என்று திருக்குர்ஆன் அறிவிக்கிறது. (22:37).பொருளாதாரம் தொடர்பான எதையும் இறைவனுடன் தொடர்புபடுத்தினால் அவற்றை ஏழைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு. எனவே ஏழைகள் மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கொண்டாடவும், இப்ராஹீம் நபியைப் போல் எத்தகைய தியாகத்திற்கும் தயார் என்பதை உணர்த்தும் வகையிலும் தான் இது கடமையாக்கப்பட்டுள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More