Tuesday, January 26, 2016

கலைச்சொற்கள்

தபூக்
 மதீனாவுக்கு வடக்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரம். ஹிஜ்ரீ 9 ஆவது ஆண்டு ரஜப் மாதத்தில் முஸ்லிம்களுக்கும் கிழக்கு ரோமானியர்களுக்கும் இடையே இங்கு நடைபெற்ற போர் 'தபூக் போர்' எனப்படுகிறது.
தயம்மும்
 'நாடுதல்' என்பது இதன் பொருள். இஸ்லாமிய வழக்கில் அங்கத்தூய்மைக்கு (உளூ) மாற்றமான ஒரு தூய்மை முறை. உளூ செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காத நேரத்திலும், நோய் போன்றவற்றால் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நேரங்களிலும் சுத்தமான மண்ணில் கைகளைப் பதித்து, உதறி, அல்லாஹ்வின் ஆணைக்கு இணங்க நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைக்கு உட்பட்டு முகத்திலும் கைகளிலும் தடவிக்கொள்ளும் முறை.
தவ்ராத்
 தோரா, இறைத்தூதர் மூசா (அலை) அவர்களுக்கு (Moses) இறைவன் அருளிய வேதம். இது விவிலியம் பழைய ஏற்பாடு (Old Testamant) என்று கருதப்படுகிறது. ஆனால்,அருளப்பெற்ற அதே நிலையில் தற்போது அது இல்லை.
தஜ்ஜால்
  அந்தி கிறிஸ்து (Anti Crist) உலக அழிவுக்குமுன் மத்திய கிழக்கு ஆசியாவில் யூதர்களிடையே தோன்றவிருக்கும், கண்கட்டு வித்தைகளில் கைதேர்ந்த மகா பொய்யன், ஒற்றைக் கண்ணுடையவன். இவனை இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள் அழிப்பார்கள். குழப்பவாதியான இவனை 'மசீஹீத் தஜ்ஜால்' என்பர்.
தாபிஉ
  பின்தொடர்ந்தவர் என்பது இதன் சொற்பொருள், நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையில் வாழ்ந்த முஸ்லிம்கள். நபித்தோழர்களை ச்சந்தித்தவர். தாபிஊன் (தாபிஉகள்) என்பது பன்மை. முஸ்லிம் ஒருவர் நபி (ஸல்) அவர்களை சந்தித்திருக்காவிடில் அவர்கள் நபியவர்களது காலத்தில் வாழ்ந்தவராயினும் அவர் தாபிஉகளில் ஒருவராகவே கருதப்படுவார்.
தாயிஃப்
 புனித மக்காவுக்குத் தென்கிழக்கே 113 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இயற்கையழகு கொஞ்சும் ஒரு மலை நகரம். கோடை வாசஸ்தலம்.
திர்ஹம்
  இது 3.06 (அல்லது 2.975) கிராம் எடையளவுள்ள அக்கால வெள்ளி நாணயம்.
தீனார்
 4.374 கிராம் எடையளவுள்ள அக்கால தங்க நாணயம்
துல்கஅதா
   இஸ்லாமிய ஆண்டின் பதினொன்றாவது மாதம்.
துல்ஹஜ், துல்ஹிஜ்ஜா
  இஸ்லாமிய ஆண்டின் பன்னிரன்டாவது மாதம்.
தூர்
 மலை என்பது சொற்பொருள். எகிப்திலுள்ள சினாய் மலையை இச்சொல் குறிக்கும். இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் நின்று இறைவனுடன் உரையாடிய மலையின் பெயர் (தூர் சீனாஉ அல்லது தூர் சினாய்)
நபிமொழி
  ஹதீஸ் (Prophetic tradition) நபி (ஸல்) அவர்களின் சொல், செயல். அங்கிகாரம் போன்றவையே ஹதீஸ் எனப்படும்.
நம்ரூத்
 Nimrod. அக்கால பாபிலோன் (இராக்) அரசனின் பெயரே நம்ரூத் பின் கன்ஆன் என்பதாகும். உலகம் முழுவதையும் ஒரே நேரத்தில் ஆட்சி புரிந்த நால்வரில் நம்ரூதும் ஒருவன் என கூறப்படுகிறது. இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு கடும் துயரங்களைக் கொடுத்து வந்த இந்த சர்வாதிகாரியிடமிருந்து இறைவன் அவர்களை காப்பாற்றினான்.
நஜாஷி
 நீகஸ் (Negus) அபீசீனிய நாட்டு மன்னர்களின் புனைபெயர். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நஜாஷீயின் இயற்பெயர் அஸ்ஹமா. அவர் நபியவர்களை நம்பிக்கை கொண்டதுடன் மக்கா நகர முஸ்லிம்களுக்கு இக்கட்டான காலத்தில் ஆதரவும் நல்கினார். ஹிஜ்ரீ 9ஆம் ஆண்டு இறந்தார்.
நூஹ் (அலை)
   நோவா. நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் முன்னோர்களில் தோன்றிய முக்கிய இறைத்தூதர். இவரது ஊர் இராக், டைக்ரிஸ், யூப்ரடிஸ் நதிக் கரைகளை ஒட்டியே அவர்கள் வாழ்ந்துள்ளார்கள். நபி ஆதம் (அலை) அவர்களுக்குப் பின் வந்த அவர்கள் 950 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அவர்களது காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தை இன்றும் வரலாறு பேசும்.
ஃபிர்அவ்ன்
 பார்வோன் (Pharaoh) அமாலிக்கா (அமலேக்கிய) அரசப் பரம்பரையில் வந்த 11வது எகிப்து நாட்டு அரசனின் புனைபெயர். இறைத்தூதர் மூசா (அலை) அவர்களது காலத்தில் சர்வாதிகாரியாக இருந்த ஃபிர்அவ்னின் இயற்பெயர் வலீத் பின் முஸ்அப் அர்ரய்யான் என்பதாகும். கிப்தீ (Coptic) குலத்தில் பிறந்த இவன் கி.மு. 15 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்ரவேலர்களைக் கொத்தடிமைகளாக நடத்திவந்தான். வரலாற்றாசிரியர்கள் இவனை இரண்டாம் ரம்சேஸ் (Ramses II) என்று குறிப்பிடுகின்றனர். இறைத்தூதர் மூசா (அலை) அவர்களுக்கும் அவர் சமுகத்திற்கும் எதிராக செயல்பட்ட இவன் இறை ஆணையால் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டான். எகிப்திலுள்ள ராயல் அருங்காட்சியகத்தில் இன்றளவும் இவனுடைய உடல் பாதுக்காப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஃபிர்தெளஸ்
  நல்ல மனிதர்களுக்கு மறுமையில் இறைப்புறத்திலிருந்து வழங்கப்படும் உயர் தரமான சொர்க்கத்திற்கு 'ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்' என்று பெயர்.
பத்ரு
 மக்காவுக்கும், மதீனாவிற்கும் இடையே உள்ள ஓர் இடம். மதீனாவுக்குத் தென்மேற்கே 147 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்தில் மக்கா இறைமறுப்பாளர்களுக்கும் மதீனா முஸ்லிம்களுக்கும் இடையே ஹிஜ்ரீ 2 (கி.பி 624) ரமளான் திங்கள் 17ஆவது நாள் வெள்ளிக்கிழமை நடந்த வரலாற்று ச்சிறப்பு மிக்க போரே 'பத்ருப் போர்' எனப்படுகிறது.
பனூ
 மகன்கள். ஒருவருக்குப் பிறந்த பிள்ளைகள் மூலம் தழைத்த ஒரு குலத்தை அவருடைய பெயரால் அழைக்கும்போது இச்சொல் ஆளப்படும் (உம்) பனூ ஹாஷிம், பனூ முத்தலிப். ஹாஷிம் குலத்தார், முத்தலிப் குலத்தார்.
பாங்கு
 தொழுகைக்கு விடுக்கப்படும் அறிவிப்பே பாரசீகத்தில் பாங்கு அல்லது அரபியில் அதான் ஆகும். தொழுகைக்கு அறிவிப்பு கொடுப்பவர் 'முஅத்தின்' எனப்படுவர். பாங்கு என்றால் ஒலி எனப்படும். எனவே தான் தமிழில் அதனை பாங்கொலி என்கிறார்கள்.
மஃக்ரிப்
  சூரியன் மறைதல், மேற்குத்திசை என்பன இதன் சொற்பொருளாகும். சூரியன் மறைந்ததிலிருந்து செம்மேகம் மறையும் வரையுள்ள நேரத்திற்குள் தொழவேண்டிய கடமையான தொழுகைக்கு மஃக்ரிப் தொழுகை என்று பெயர்.
மத்யன்
 மீதியான் .செங்கடலின் கரையில் வடமேற்கு சௌதியில் உள்ள ஒரு மலைப்பிரதேசம் இதன் வடக்கே ஜோர்டான் உள்ளது. இந்த மத்யன் பகுதி மக்களை நல்வழிப்படுத்தவே ஷீஜப் (அலை) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்.
மர்யம்
 அன்னை மேரி. இம்ரான்- ஹன்னா தம்பதியினரின் மகளான இவர்கள், ஆண் துணையின்றி அற்புதமான முறையில் ஈசா (அலை) அவரளைப் பெற்றடுத்த கன்னித்தாய் ஆவார்கள். இறுதிவரை மணமுடித்துக்கொள்ளாத அன்னை மர்யம் (அலை) அவர்களை இறைத்தூதர் ஸகரிய்யா (அலை) அவர்களே வளர்த்தார்கள்.
மஸ்ஜித்
 பள்ளிவாசல். சிரவணக்கம் செய்யுமிடம் என்பது இதன் சொற்பொருள்.இதன் பன்மை மஸாஜித்.
மஸ்ஜிதுந் நபவீ
 மதினாவில் அமைந்துள்ள பள்ளிவாசல். நபியின் பள்ளிவாசல் என்பது இதன் பொருள். உலகின் இரண்டாவது புனிதப் பள்ளிவாசல் ஆகும்.
மஸ்ஜிதுல் ஹராம்
 ஆதி ஆலயமான கஅபாவை உள்ளடக்கிய பள்ளிவாசலை மஸ்ஜிதுல் ஹராம் (புனித பள்ளிவாசல்) என்று கூறுவர். இது முதலாவது புனித பள்ளிவாசல் ஆகும்.
மினா
 சவுதி அரேபியாவில் புனித மக்காவிற்கு அருகிலுள்ள ஒரு பகுதியின் பெயர். மக்காவுக்கும் அரஃபாவுக்கும் இடையே அதாவது மக்காவிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவிலும் அரஃபாவிலிருந்து சுமார் 17 கி.மீ தூரத்திலும்  உள்ளது. ஹஜ் செய்யும் காலத்தில் (துல்ஹஜ் மாதம் 11 12 13 ஆகிய) மூன்று நாட்கள் இங்கு தங்கியிருந்து சைத்தானுக்கு அடையாளமாக நிறுவப்பட்டுள்ள தூண்களில் கல்லெறிய வேண்டும். அத்தகைய நாட்களை 'அய்யாமு மினா' (மினாவின் நாட்கள்) என்பர்.
மீக்காயீல்
 Angel Michael. முக்கியமான வானவர்களில் ஒருவர். குர்-ஆனில் குறிப்பிடப்படும் ஒருசில வானவர்களில் இவரும் ஒருவர்.
முசைலிமா
  சவுதி அரேபியாவில் 'நஜ்த்' நகரின் அருகே யமாமா என்ற ஊரில் பனூ ஹனீஃபா குலத்தை சார்ந்த ஒருவனின் பெயர் தான் முசைலிமா. இவன் நபி (ஸல்) அவர்களது காலத்தில் தன்னை நபி என பொய்யாக வாதிட்டான். இதனால் அவன் முசைலிமா அல் கத்தாப் (மகா பொய்யன் முசைலிமா) என்றே அழைக்கப்பட்டான். அபூபக்ர் (ரலி) அவர்களது காலத்தில் இவனுக்கு எதிராக படையெடுத்து ஹிஜ்ரீ 12 ஆம் ஆண்டில் (கி.பி. 633 ல்) நடைபெற்ற போரில் இவன் கொல்லப்பட்டான். அப்போரே யமாமா போர் எனப்படும்.
முஸ்லிம்
 சாந்தியளிப்பவர். கீழ்ப்படிகின்றவர் என்பது இதன் பொருள். ஏக இறை நம்பிக்கைக் கொண்டு இறைச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிகின்றவர். இறைவழிபாடுகளைகளை சரிவர செய்து வருகின்றவர்.
முஹம்மது (ஸல்)
 இறுதி இறைத்தூதரின் பெயர். 'புகழப்பட்டவர்' என்பது இதன் பொருள். இவர்கள் கி.பி 570 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் பிறந்து கி.பி. 632 ஆவது ஆண்டு மதீனாவில் மறைந்தார்கள்.
முஹர்ரம்
 இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதம்.
முஹாஜிர்
 துறந்தவர் என்பது இதன் சொற்பொருள். இஸ்லாமிய வரலாற்றில் மக்கா நகரைத் துறந்து மதீனாவிற்கு ச்சென்ற முஸ்லிம் அகதிகளை 'முஹாஜிர்கள்' என்பர்.
மூசா (அலை)
 மோசே (Moses) இறைத்தூதர் யாகூப் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களான இஸ்ரவேலர்கள் குடும்பத்தில் கி.மு. 15 ஆவது நூற்றாண்டில் எகிப்தில் பிறந்த ஓர் இறைத்தூதர். கொடுங்கோலன் இரண்டாம் ரம்சேஸ் (ஃபிர்அவ்ன்) கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இஸ்ரவேலர்களை அவனிடமிருந்து மீட்டார்கள். இவர்களுக்கு இறைவன் "தவ்ராத்" (தோரா) எனும் வேதத்தை அருளினான்.
யாகூப் (அலை)
  யாக்கோபு (Jocob கி.மு.2000 -1850) இவர்கள் நபி இஸ்ஹாக் அவர்களின் புதல்வரும் இறைத்தூதர்களில் ஒருவரும் ஆவார். அவர்களுக்கு 12 ஆண் பிள்ளைகள் இருந்தனர். இந்தப் பன்னிருவரின் வழித்தோன்றல்களே இஸ்ரவேலர்கள் ஆவர். யாகூப் (அலை) அவர்களின் மற்றறொரு பெயரே இஸ்ராயீல் என்பதாகும்.அதனால் தான் இஸ்ரவேலர்களை பனூ இஸ்ராயீல் என்பர். யாகூப் (அலை) அவர்களிலிருந்து தான் இஸ்ரவேல் நபிமார்கள் நபி ஈசா (அலை) அவர்கள் வரை அனைவரும் தோன்றினர்,
யூசுஃப் (அலை)
 யோசேப்பு ( Joseph கி.மு 1910 -1800 ) நபி யாகூப் (அலை) அவர்களின் இளைய புதல்வரான இவர்களும் ஓர் இறைத்தூதர் ஆவார்கள். லெபனானில் கன்ஆனில் பிறந்த இவர்கள் பேரழகுக்கும் அழகிய வரலாற்றுக்கும் சொந்தக்காரர்கள். நபிமார்கள் பரம்பரையில் பிறந்த பெருமைக்குரிய இவர்கள் ஒரு நிலையில் எகிப்தின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்கள்.
யூதர்கள்
யஹூத் (Jews)  இறைத்தூதர் யாகூப் (அலை) அவர்களுக்கு 12 ஆண் பிள்ளைகள் இருந்தனர். இந்த பன்னிருவரின் வழித்தோன்றல்களான இஸ்ரவேலர்கள் கிறிஸ்துவின் பிறப்புக்கு பின் இரு பிரிவினராக பிர்ந்து விட்டனர். அவர்களின் ஒரு பிரிவினரே யூதர்கள் ஆவர். இன்னொரு பிரிவினர் கிறித்துவர்கள் (நஸாரா) ஆவர்.
யூனுஸ் (அலை)
  யோனா (Jonah கி.மு. 781-741) இவர்கள் இராக்கிலுள்ள நீனவா (நினிவே) எனும் ஊரில் வாழ்ந்தார்கள். அந்தப் பகுதி மக்களுக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்.
ரக்அத்
 தொழுகையில் ஒரு முறை நிற்றல், ஒரு முறை குனிதல், இரண்டு சஜ்தாக்கள் (சிர வணக்கம்) செய்தல் அவற்றுக்கிடையே சிறிது நேரம் அமர்தல் ஆகிய நிலைகளாய் உள்ளடக்கிய ஒரு பகுதி.
ரபீஉல் அவ்வல்
 இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதம்.
ரபீஉல் ஆகிர்
   இஸ்லாமிய ஆண்டின் நான்காவது மாதம்.
ரமலான்
 இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதம்.
ரஜப்
 இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம்.
லுஹ்ர்
 மதியத் தொழுகை. பிற்பகலின் துவக்கத்திலுள்ள நேரம். இதிலிருந்து பிற்பகலின் நடுப்பகுதி வரையுள்ள நேரத்தில் நிறைவேற்றப்படும் கடமையான தொழுகையே 'லுஹ்ர் தொழுகை' எனப்படுகிறது.
லூத் (அலை)
 லோத்து (Lot -கி.மு. 2061) இறைத்தூதர்களில் ஒருவர். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சகோதரர் மகனான இவர்கள் கிழக்கு ஜோர்டானில் உள்ள  சதூம் (சோதோம்) பகுதி மக்களை நல்வழிப்படுத்த இறைத்தூதராக நியமிக்கப்பெற்றார்கள். சிலை வழிப்பாட்டையும் ஒருபால் உறவையும் எதிர்த்துத் தீவிரப் பிரச்சாரம் செய்தார்கள்.
வஸ்க்
 பழங்காலத்தில் அரபியர்கள் பயன்படுத்திய ஒரு அளவை. அது இன்றைக்கு 191.56 (அல்லது 122.40) கிலோ கிராம் எடை பெறுமானமுள்ளது.
வஹீ
 இறைச்செய்தி. வேத அறிவிப்பு, வானவர் மூலம் இறைத்தூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பெற்ற இறைச்செய்தி வேத வெளிபாடு
ஹஜ்ஜத்துல் வதா
    ஹஜ் கடமையாக்கப்பட்ட பின்னர், நபி (ஸல்) அவர்கள் தாம் இறப்பதற்கு முந்தைய (ஹிஜ்ரீ பத்தாவது) ஆண்டில் முதலாவதாகவும் இறுதியாகவும் செய்த ஹஜ் ஹஜ்ஜத்துல் வதா (விடைபெறும் ஹஜ்) என்று அழைக்கப்படுகிறது.
ளுஹா
  சூரிய உதயத்திற்கும் நண்பகலுக்கும் இடைப்பட்ட நேரம். முற்பகல் இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுத எட்டு ரக்அத் தொழுகைக்கு ளுஹா தொழுகை எனப்படுகிறது.
ஜனாஸா
  பிரேதம். பிரேதம் வைக்கப்பட்டுள்ள பெட்டி ஆகிய இரண்டையும் இச்சொல் குறித்தும் இறந்துப்போன ஒருவருக்காகப் பிரார்த்திக்கும் நோக்கத்தில் தொழப்படும் இறுதித் தொழுகைக்கே 'ஜனாஸா தொழுகை' என்பர்.
ஜிப்ரீல்
 ஜிப்ரால், ஜிப்ராயீல் Angel Gabriel) இறைவனிடமிருந்து இறைத்தூதர்களுக்கு இறைச்செய்தி கொண்டுவந்த வானவர்.இவரே வானவர்களின் தலைவர் ஆவார்.
ஜின்கள்  
 மனித இனமும் வானவர் இனமும் அல்லாத ஓர் இனம். இந்த இனம் நெருப்பால் படைக்கப்பட்டதாகும். கண்ணுக்குத்தெரியாத வாயுவாகவும் மனிதன் உட்பட ஏனைய பல்வேறு உயிரினங்களின் தோற்றங்களிலும் ஜின்கள் காட்சியளிக்க முடியும். மனித இனத்திற்கு முன்பே இந்த இனம் படைக்கப்பட்டுவிட்டது. ஜின்களில் ஆண், பெண் சந்ததிப் பெருக்கம் ஆகியவை உண்டு. இவர்களுக்கு மார்க்க சட்டம், நன்மை தீமை ஆகியவற்றில் தன்னியலாற்றல் ஆகியவை உண்டு. சைத்தான்களின் தந்தையான இப்லீஸ் இந்த இனத்தில் பிறந்தவன் ஆவான்.
ஜூமாதல் ஆகிரா
 இஸ்லாமிய ஆண்டின் ஆறாவது மாதம்
ஜூம்ஆ
 வெள்ளிக்கிழமை. இந்நாளில் முஸ்லிம்கள் சூரியன் உச்சியிலிருந்து சாயும்போது பள்ளிவாசலில் ஒன்றுக்கூடி ஜூம்ஆ எனும் சிறப்புத் தொழுகையை நடத்துவதால் அது ஜூம்ஆ நாள் (ஒன்றுகூடும் நாள்) என்று அழைக்கப்படுகிறது.
ஷஅபான்
  இஸ்லாமிய ஆண்டின் எட்டாவது மாதம்
ஷவ்வால்
  இஸ்லாமிய ஆண்டின் பத்தாவது மாதம்
ஷியாக்கள்
  தவறான கொள்கைளைக் கொண்ட முஸ்லிம்களில் ஒரு பகுதியினர். எனவேதான் ஷியாக்கள் என்றால் பிரிவுகள் என்று பொருள் எனவே தான் அவர்களை ஒரு பிரிவினர் என்றும் சொல்லப்படுகிறது. அலீ (ரலி) அவர்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருந்த அவர்களுடைய அபிமானிகளே 'ஷியாக்கள்' எனப்பட்டனர். நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு அலீ (ரலி) அவர்களே ஆட்சித் தலைவராக வரவேண்டும் என்றும் அவர்களுக்கு பின்னால் அவர்களின் வழித்தோன்றலுக்கு மட்டுமே ஆட்சி பொறுப்பு உரியது என்பதும் மற்றவர்களுக்கு சிறிதளவும் அதில் உரிமையில்லை என்பதும் அவர்களின் கொள்கையாகும்.
ஸஃபர்
  இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதம்
ஸகாத்
 கட்டாயக்கொடை அல்லது கட்டாய தர்மம்.ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வம் ஒரு முஸ்லிமின் சேமிப்பில் இருந்தால், அவர் அதிலிருந்து இரண்டரை சதவீகிதம் கட்டாயமாகத் தானம் வழங்கவேண்டும். குர்-ஆனில் (9:60) குறிப்பிடப்பட்டுள்ள எட்டுப் பிரிவினரில் எவருக்கேனும் இது வழங்கப்பட வேண்டும்.
ஸபூர்
நபி யாகூப் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் வந்த தாவூத் (அலை) அவர்களுக்கு (David) இறைவன் அருளிய வேதம். இதுவே ஸபூர் வேதம் எனப்படுகிறது.
ஸாஉ
  மதீனாவில் நடைமுறையில் இருந்துவந்த 2 கிலோ 135 கிராம் எடை கொண்ட ஓர் அளவை
ஸாலிஹ்
 சவுதியில் உள்ள 'அல்ஹிஜ்ர்' எனும் இடத்தில் வாழ்ந்த இறைத்தூதர் ஆடம்பர வாழ்வில் மூழ்கி சிலை வழிப்பாட்டில் வீழ்ந்து கிடந்த 'ஸமுத்' கூட்டத்தாரை சீர்திருத்த இவர்கள் இறைவன் பால் அனுப்பட்டார்கள்.
ஹராம், ஹலால்
 திருக்குர்-ஆன் மற்றும் நபி (ஸல்) அவரளால் சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டதே ஹராம் ஆகும்.அதுப்போல சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது ஹலால் ஆகும்.மேலும் ஹராம் என்ற பதம் புனித என்னும் பொருளிலும் கையாளப்படுகிறது அதாவது முஹர்ரம் மாதத்தை அஷ்ஷஹ்ருல் ஹராம் (புனித மாதம்) என்றும் மக்கா நகரை அல்பலதுல் ஹராம் (புனித நகரம்) என்றும் கஅபாவை உள்ளடக்கிய பள்ளிவாசலை 'அல்மஸ்ஜிதுல் ஹராம் (புனித பள்ளிவாசல்) என்றும் குறிப்பிடப்படுவார்கள்.
ஹஜருல் அஸ்வத்
   கஅபாவின் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள கறுப்புக்கல். கஅபாவை (தவாஃப்)சுற்றும்போது இதை முத்தமிடல் நபிவழியாகும். இக்கல்லின் ஒரு மூலைப் பகுதிக்கு  'ருக்னுல் யமானீ' (யமனிய மூலை) என்றும் பெயருண்டு. "இக்கல்லுக்கு எந்த ஒரு தெய்வீக தன்மையும்" கிடையாது.
ஹாருன் (அலை)
 ஆரோன் (Aaron) இறைத்தூதர். நபி மூசா (அலை) அவர்களின் மூத்த சகோதரர் எகிப்தின் சர்வாதிகாரி இரண்டாம் ராம்சேஸை (ஃபிர்அவ்ன்) எதிர்க்கப் போராடியதில் மூசா (அலை) அவர்களுக்கு உறுதுணையாக நின்றவர்கள்.
ஹிராக்ளீயஸ்
  ஹிரக்ல் (Heraclius -கி.பி. 610-641) இது நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்த கிழக்கு ரோமானியப் பேரரசர் சீஸர் பெயர். இவரோடு கிழக்கு ரோமானியப் பேரரசு முடிவுக்கு வந்தது.
ஹிஜ்ரத்
  புலம் பெயர்தல். ஒருவர் இறை மார்க்கத்தைப் பின்பற்றுவதற்குத் தடைகள் ஏற்படும்போது, தாம் வசிக்குமிடத்தைத் துறந்து வேற்றிடம் செல்லல்.
ஹிஜ்ரீ
 இஸ்லாமிய ஆண்டு.ஹிஜ்ரத் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே 'ஹிஜ்ரீ' எனும் இஸ்லாமிய ஆண்டு துவங்குகிறது. அவைகள் (1)முஹர்ரம் (2)ஸஃபர் (3)ரபீஉல் அவ்வல் (4)ரபீஉல் ஆகிர் (5)ஜூமாதல் ஊலா (6)ஜூமாதல் ஆகிரா (7)ரஜப் (8)ஷஅபான் (9)ரமலான் (10)ஷவ்வால் (11)துல்கஅதா (12)துல்ஹஜ்.
ஹூதைபிய்யா
 இது மக்காவிலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். ஹிஜ்ரீ 6வது ஆண்டு (கி.பி.627) நபி(ஸல்) அவர்களும் மக்காவாசிகளும் இங்கு செய்து கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் 'ஹூதைபிய்யா ஒப்பந்தம் அல்லது ஹூதைபிய்யா உடன்படிக்கை' எனப்படுகிறது.
ஹூனைன்
 மக்காவிற்கும் தாயிஃபிற்கும் இடையே உள்ள 'அரஃபா'வின் திசையில் மக்காவிலிருந்து சுமார் 18 கி.மீ. சற்று தொலைவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கின் பெயர். ஹிஜ்ரீ 8வது ஆண்டு (கி.பி. 630) ஷவ்வால் மாதம் 'ஹவாஸின்' எனும் அரபுக்குலத்தாருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இங்கு நடைப்பெற்ற போரே 'ஹூனைன் போர்' எனப்படுகிறது.
ஹூத் (அலை)
 நபி நூஹ் (அலை) அவர்களுக்கு பின்னர் வந்த இறைத்தூதர்களில் ஒருவர். (கி.மு.2538). பழங்கால அரபு சமுகத்தாரான 'ஆத்' சமுகத்துக்கு  நல்வழி காட்ட இறைவன் பால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.
இஃதிகாப்
  தங்கியிருத்தல். தடுத்துக்கொள்ளல் என்பன இதன் சொற்பொருளாகும். இறைவனுக்காக, இறைத்தூதர் வழியில் குறிப்பிட்ட காலம் பள்ளிவாசலில் தங்கும் ஒரு வகை வழிபாடு. ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பது நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது.
அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்
  'அஹ்லுஸ் சுன்னத் என்பதற்கு நபி வழியுடையோர்' என்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு நபித்தோழர்கள் வழியுடையோர் என்றும் பொருளாகும். நபிவழியையும், நபித்தோழர்கள் வழியையும் பின்பற்றுவர்கள் யாரோ அவர்களே அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் ஆவர்
இல்யாஸ்
 எலியா, நபி ஹாரூன் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்த ஓர் இறைத்தூதர். அன்றைய ஷாம் நாட்டு மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டவர்கள்.
உஹூத்
 மதீனாவிற்கு வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு மலை. ஹிஜ்ரீ 3வது ஆண்டு (கி.பி.625) ஷவ்வால் மாத மத்தியில் முஸ்லிம்களுக்கும் இறைமறுப்பாளர்களுக்கும் இடையே இங்கு நடைபெற்ற சண்டையே 'உஹூத்ப் போர்' எனப்படுகிறது.
தஹஜ்ஜூத்
  இரவுத்தொழுகை. பின்னிரவு நேரத்தில் நிறைவேற்றப்படும் எட்டு ரக்அத்கள் கொண்ட ஒரு கூடுதல் தொழுகை. 'தூக்கத்தைக் கைவிடல்' என்பது இதன் சொற்பொருள் ஆகும்.
ஃபர்ள்
  கட்டாயக் கடமை என்பது இதன் பொருள். இதில் ஒவ்வொரு தனிமனிதன் மீதும் விதியாகின்ற கடமைக்கு 'ஃபர்ள் ஐன்' (தனிமனித கடமை) என்பர். (-ம்)ஐவேளைத் தொழுகை, ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது விதியாகின்ற கடமைக்கு 'ஃபர்ள் கிஃபாயா' (சமுதாய கடமை) என்பர். (-ம்) ஜனாஸா தொழுகை.
ஆமீன்
  'அப்படியே ஆகட்டும் என்று பொருள். 'சீரியாக் அல்லது ஹூப்ரு' மொழிச்சொல்லான இது "இறைவா! ஏற்றுக்கொள்வாயாக!!" எனும் பொருளில் ஆளப்படுகிறது
ஆயத்
  வசனம். இதன் பன்மை ஆயாத். திருக்குர்-ஆனில் உள்ள அனைத்து வசனங்களையும் குறிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. எனினும் சான்று, அற்புதம் ஆகிய பொருள்களும் இதற்கு உண்டு.
இணைவைத்தல்
 (ஷிர்க்- பல தெய்வக் கொள்கை) ஏக இறைவனுக்கு இணையாகப் பிற பொருட்களையோ, மனிதர்களையோ ஏனைய உயிரினங்களையோ நம்பிக்கை கொள்வதற்கு இணைவைத்தல் அல்லது இணை கற்பித்தல் என்று பெயர். ஏக இறைவனுக்கே உரித்தான பண்புகள், தனித் தன்மைகள், வழிபாடுகள் மற்றும் அதிகாரங்கள் ஆகியவற்றில் அவனுக்கு இணையாகப் பிறரைக் கருதுவதும் இணைவைப்பில் அடங்கும். இச்செயல்களை மேற்கொள்பவர்களை 'முஷ்ரிக்' (இணைவைப்பாளர்) என்பர். 'முஷ்ரிகூன் அல்லது முஷ்ரிகீன்' என்பது இதன் பன்மையாகும். இணைவைத்தல் மன்னிக்கமுடியாத குற்றம் எனக் குர்-ஆன் சாடுகிறது.
இத்தா
 'கணித்தல், எண்ணுதல், காத்திருத்தல்' என்பன இதன் சொற்பொருளாகும். கணவனால் மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண் மூன்று மாதவிடாய்க் காலமும், கணவன் இறந்த பெண் நான்கு மாதம் பத்து நாட்களும் வீட்டில் தங்கியிருத்தலே "இத்தா" ஆகும். மாதவிடாய் அற்றுப்போன பெண் மணவிலக்கு செய்யப்பட்டால்  மூன்று மாதங்கள் இத்தா இருக்க வேண்டும்.கருவுற்றிருக்கும் பெண்ணின் இத்தாக் காலம், பிரசவம் வரையிலாகும். கணவன் இறந்துப்போன கர்ப்பிணிக்கும் இது பொருந்தும்.
இஸ்ராஃபீல்
  முக்கிய வானவர்களில் ஒருவர். உலக அழிவின்போதும், மனிதர் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும்போதும் எக்காளம் (ஸூர்) ஊதும் பொறுப்பு இவரிடமே ஒப்படைக்கப்படுகிறது.
உம்மீ
 'தாயை சார்ந்தவர்" என்பது பொருள். பொதுவாக எழுத வாசிக்க தெரியாத தாயின் இயல்புகளை மட்டுமே பெற்ற ஒரு மனிதனை 'உம்மீ' என்பர் அரபுகள். நபிகளார் காலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்த மனிதர்கள் அரிதாகவே காணப்பட்டனர். எனவே அன்றைய மக்கள் 'உம்மிய்யூன்' என்றழைக்கப்பட்டனர். அத்தகைய சமுதாயத்திற்கு அறிவொளியே ஏற்ற வந்த நபிகளாரும் எழுத வாசிக்க தெரியாத உம்மீயாகவே இருந்தார்கள்.
கஸ்ர்
 சுருக்குதல், கட்டாயமான நான்கு ரக்அத் தொழுகைகளைப் பயணத்தின் போது இரண்டு ரக் அத்துகளாக சுருக்கித் தொழுவதற்கே 'கஸ்ர்' என்றுப் பெயர்.
கிரான்
 (ஹஜ் வகை) இதற்கு 'சேர்த்தல்' என்று பொருள்ஹஜ்ஜையும், உம்ராவையும் ஒரே இஹ்ராமில் நிறைவேற்றுவது ஹஜ் கிரான் என்று அழைக்கப்படும்.
அர்ஷ்

 ஆட்சி பீடம், சிம்மாசனம், கட்டில், வீடு, முகடு போன்ற பல பொருட்கள் இதற்கு உண்டு "இறைவனின் ஆட்சி பீடம்" அல்லது "இறைவனின் அரியணை" எனும் பொருளில் இச்சொல் ஆளப்படுகிறது

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More